பொருளாதாரக் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் ஈ.டி. எனப்படும் அமலாக்கத்துறையின் வரலாறு குறித்தும் அதன் அதிகாரங்கள் குறித்தும் விளக்குகிறது இந்த சிறப்புத் தொகுப்பு.
கடந்த சில நாட்களாகவே தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் அதிகளவில் பரிட்சியமாகிப் போன வார்த்தை ஈ.டி. எனப்படும் அமலாக்கத்துறை.
இந்தியாவில் பொருளாதார சட்டங்களைக் கண்காணிக்கவும், பொருளாதார குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உருவாக்கப்பட்டதுதான் என்போர்ஸ்மெண்ட் டைரக்டரேட் எனப்படும் அமலாக்கத்துறை. இந்திய அரசு வகுத்துள்ள பொருளாதாரச் சட்டத்தை அமல்படுத்துவதால் இத்துறை அமலாக்கத்துறை என்று அழைக்கப்படுகிறது.
1956ம் ஆண்டு அமலாக்கப்பிரிவு தொடங்கப்பட்ட அமலாக்கப்பிரிவு இந்தியாவில் தனது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 (எப்.இ.எம்.ஏ.) மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (பி.எம்.எல்.ஏ.) மற்றும் கடத்தலை தடுப்பது போன்ற சட்டங்களின் விதிகளை செயல்படுத்த அமலாக்கப்பிரிவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையினர் எந்தவொரு இடத்திற்கும் அதாவது கட்டிடம், இடம், வாகனம், கப்பல் விமானம் என எங்கு வேண்டுமென்றாலும் திடீரென்று நுழைந்து அதிரடியாக சோதனை நடத்த அதிகாரம் பெற்றுள்ளனர். மேலும் தாங்கள் சோதனை மேற்கொள்ளும் இடங்களில் இருக்கும் கதவு, பெட்டி, லாக்கர், அலமாரி என எதையும் சாவி கொண்டு திறந்தும், சாவி இல்லாத பட்சத்தில் உடைத்து ஆராய்வதற்கும் அதிகாரம் பெற்றுள்ளனர்.
அவ்வாறு சோதனை மேற்கொள்ளும் போது அங்கு சிக்கும் ஆவணங்களையும், சொத்துக்களையும் பறிமுதல் செய்யவும், அந்நியசெலாவணி மேலாண்மை சட்டத்தின் 37சரத்தின்படி எந்தவொரு சொத்துக்களை ஆராயவோ, அது குறித்து விசாரிக்கவோ அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு.
அப்படி ஆவணங்கள் சிக்கும்பட்சத்தில் எந்தவொரு நபரையும் விசாரணைக்கு அழைக்க சம்மன் அனுப்பவும், உடனடியாக கைது செய்வதற்குமான அதிகாரத்தை பெற்றுள்ளது அமலாக்கத்துறை.
பணமோசடி வழக்கு குறித்து விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையினர், இது குறித்த வழக்குகளில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்பவர்களின் வழக்குகளையும் விசாரிக்கும் உரிமை பெற்றுள்ளது. மேலும் இண்டர்போல் உதவியுடன் வெளிநாடுகளில் பதுங்கி இருப்பவர்களையும் அமலாக்கத்துறையினரால் கைது செய்ய முடியும்.
இத்தகைய சிறப்புவாய்ந்த அமலாக்க இயக்குநரகத்தின் தலைமையகம் டெல்லியில் அமைந்துள்ள நிலையில் அதன் அலுவலகங்கள் மும்பை, சென்னை, சண்டிகர், கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய 5 இடங்களில் இயங்கி வருகிறது.
இணை இயக்குநரின் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் மண்டல அலுவலகங்கள் அகமதாபாத், பெங்களூர், சண்டிகர், சென்னை, கொச்சி, டெல்லி, பனாஜி, கவுஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜலந்தர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, பாட்னா ஸ்ரீநகர் போன்ற இடங்களில் அமைந்துள்ளன.