வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் நகரம் ஐவேலி அகரத்தில் அமைந்துள்ள பானு பீ (Bi) தர்காவுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த சர்வே எண் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க அனைத்து ஆவணங்களும் இருப்பதாக இஸ்லாமியர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு சாதகமாக மாவட்ட நிர்வாகம் செயல்படுவதாக குற்றம்சாட்டிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியிர் ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அனுமதியின்றி ஊர்வலம் வந்ததாக அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். எனினும் அவர்களை மீறி ஆட்சியர் அலுவலகத்தை இஸ்லாமிய அமைப்பினர் முற்றுகையிட முயன்றனர்.
பின்னர் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளிக்கப்பட்டது. இந்த மனுவில் ஆக்கிரமிப்பு தொடர்பான மனுவை கோட்டாட்சியர் வாங்க மறுப்பதாகவும், அவருக்கு வட்டாட்சியரும் துணையாக இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.