பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி இல்லை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையின் மொத்த உயரம் 120 அடியாகும்.
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில், அணைக்கு தண்ணீர் வரும் போது, மலை முகடுகளில் இருந்து பாறைகள், கற்கள், மண், மரத்துண்டுகள் உள்ளிட்டவை அடித்து வரப்பட்டு, அணையில் ஆங்காங்கே தேங்கி நிற்கும்.
ஆழியார் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில், அணை நீர்மட்டம் சரியும் நேரத்தில், அணையின் ஒரு பகுதியில் இருந்து வண்டல் மண் எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
அதன்படி இதுவரை 65 ஆயிரம் கன மீட்டர் வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச்சென்றதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், பருவமழை எந்நேரத்திலும் பெய்யலாம் என்பதால், இன்று முதல் ஆழியாறு அணையில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.