உசிலம்பட்டி அருகே விவசாயி ஒருவர் தனது மனைவியை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூரில் விவசாயி பஞ்சராஜா-சாந்தி தம்பதி வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மனைவி சாந்தியை தலையில் பலத்த படுகாயங்களுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அவரது கணவர் பஞ்ச ராஜா அழைத்து சென்றார். மருத்துவர்கள் சாந்தியை பரிசோதித்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.
இது குறித்து மருத்துவர்கள் பஞ்சராஜாவிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு சென்ற போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பஞ்சராஜாவை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவி சாந்தியை பஞ்சராஜா கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.