கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் கார் திடீரெ தீப்பிடித்தது.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சரண் கிஷோர் தனது நண்பர்களுடன் காரில் உதகைக்கு சுற்றுலா சென்றுகொண்டிருந்தார். கோவை மேட்டுப்பாளையத்தில் காரில் எரிவாயு நிரப்பிவிட்டு உதகை நோக்கி சென்ற காரில் இருந்து புகை வெளியேறி உள்ளது.
உதகை மலைப்பாதையின் முதல் கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது காரில் இருந்து துர்நாற்றமும் புகையும் அதிக அளவில் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரண் கிஷோர் உடனடியாக காரை ஓரம்கட்டினார். அவரும் அவரது நண்பர்கள் வசீகரன், ஜெகதீஷ் ஆகியோரும் உடனடியாக காரை விட்டு இறங்கிவிட்டனர்.
அடுத்த சில நிமிடங்களில் காரின் என்ஜின் பகுதி முழுவதும் தீப்பிடிக்க ஆரம்பித்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் மலைப்பாதையில் தீயணைப்பு வாகனம் வந்து சேர்வதற்குள் கார் தீயில் எரிந்து நாசமானது.
சமீபத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் கார்களில் அடிக்கடி தீப்பிடிக்கும் சம்பவம் நேரிடுகிறது. வாகனங்களை கால அட்டவணைப்படி அவ்வப்போது சர்வீஸ் செய்தால் இதுபோன்ற அசம்பாவிதங்களில் இருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள் வாகனம் பழுது பார்ப்பவர்கள்.