வேலூர் மாவட்டத்தில் வட்டிக்கு பணம் தரும் தொழில் செய்து வந்த பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்து கொள்ளும் முன்னர் தனது சாவிற்கு 5 பேர் காரணம் என கூறியுள்ளதால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பேரணாம்பட்டு அடுத்த கார்கூரை சேர்ந்த சங்கீதா என்பவர், அதே பகுதியில் துணைத்தலைவராக உள்ள மணிமாறன் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சங்கீதா வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த நிலையில், அவரிடம் பணம் வாங்கிய பலர் அசலும், வட்டியும் தராமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.
இதனால் சில தினங்களாக மன உளைச்சலில் இருந்த சங்கீதா, யாரிடமும் சரியாக பேசவில்லை. இந்த பிரச்சனை குறித்து கணவரிடம் தெரிவித்தபோதும் அவரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்ட செல்வி நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வரவில்லை. இதனால் வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது அவர் மின்விசிரியில் தூக்கில் தொங்கியபடி இருந்தார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் பேர்ணாம்பட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சங்கீதா உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே தன்னுடைய மரணத்திற்கு 5 பேர் காரணம் என்றும் அவர்கள் வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை என்றும் சுவற்றில் எழுதிவைத்துவிட்டு சங்கிதா தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் சுவற்றில் எழுதி வைத்த, அம்மு, விஜயகாந்த், சரவணன், வெங்கடேசன், சரிதா ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.