கன்னியாகுமரி மற்றும் அதை ஒட்டிய காடுகளில் 184 வகையான வண்ணத்துப் பூச்சிகள் இருப்பதாக வனத்துறையினர் தெரித்துள்ளனர்.
கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுமார் 402 சதுர கிலோமீட்டரில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக கன்னியாகுமரி வன விலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு பட்டாம்பூச்சிகளை இனம் கண்டறிய வனத்துறை சார்பில் கோடைகால கணக்கெடுப்பு முகாம் நடைபெற்றது.
இதற்காக பூதப்பாண்டி , வேளிமலை, அழகியபாண்டியபுரம், குலசேகரம், களியல் வனச் சரகங்களில் 5 இடங்கள் கண்டறியப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட வனப்பகுதியில் மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொண்ட தில் 184 பட்டாம்பூச்சி இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் தூரிகை கால் பட்டாம் பூச்சி இனங்கள் 67 உள்ளன. ப்ளூஸ் , ஸ்கிப்பர்கள் , வெள்ளை மற்றும் மஞ்சள், ஸ்வாலோடெயில்கள் ஆகியவையும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தம் 328 பட்டாம் பூச்சி இனங்கள் உள்ளன. காமன் செலியூட் ப்ளூ இன பட்டாம்பூச்சி தமிழகத்தில் பார்ப்பது மிக அரிதாகும். இந்த வண்ணத்துப்பூச்சி தமிழகத்தில் இப்போதுதான் முதன்முதலாக புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.