கோவை மாவட்டம் வடுகபாளையம் பிரிவு என்ற இடத்தில் பேனர் சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை மாவட்டம் வடுகபாளையம் பிரிவு அருகே ராமசாமி என்பவரது இடத்தில் விளம்பர பேனர் வைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. விளம்பர பேனர் வைப்பதற்கான ஒப்பந்தத்தை சேலத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கோவை கருமத்தம்பட்டி, வடுகபாளையம் பிரிவு உள்ளிட்ட இடங்களில் திடீரென சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. அப்போது ராட்சத பேனரின் சாரம் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி குணசேகரன், குமார், சேகர் ஆகிய தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள காண்ட்ராக்டர் பழனிசாமியை தேடி வருகின்றனர்.