ஈரோட்டில் மளிகை கடை காரர் வீட்டின் ஓட்டை பிரித்து இறங்கிய மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 20 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு ஸ்டோனி பாலம் பகுதியை சேர்ந்தவர் அருள்செல்வன். மளிகை கடை நடத்தி வரும் இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு மனைவியுடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பி உள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அருள்செல்வன் உள்ளே இருந்த பீரோவை பார்த்து அதில் இருந்த 20 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் மேல் பகுதியில் ஓடுகள் உடைக்கப்பட்டு கிடந்தன.
இது தொடர்பாக ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அருள் செல்வன் வெளியூர் சென்றதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் ஓட்டை உடைத்து கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றியும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.