சென்னையில் கஞ்சா கடத்திய 29 பேர் கடந்த ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் 41 கிலோ எடை கொண்ட கஞ்சா, 380 கிராம் கஞ்சா சாக்லெட்டுகள் பல்வேறு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் அடையாளம் கண்டு கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி போதை தடுப்புக்கான நடவடிக்கையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனைகள் மூலம் கடந்த 7 நாட்களில் 41 கிலோ கஞ்சா, 380 கிராம் கஞ்சா சாக்லெட்டுகள், 385 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 650 கிராம் மெத்தகுலோன் என்ற போதைப் பொருள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய பகுதிகளான கோடம்பாக்கம், ராயப்பேட்டை, பெரியமேடு, தண்டையார்பேட்டை, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.