மதுரையில் புதியதாக திறந்து வைக்கப்பட்ட பாலத்தில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு தரும் வகையில் மாடுகள் சுற்றித்திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மதுரை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வடகரை-தென் கரையை இணைக்கும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு கடந்த மே மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த புதிய ஒபுளா படித்துறை பாலம் வழியாக அனைத்து வாகனங்களும் சென்று கொண்டிருக்கும் நிலையில் அங்கு 20க்கும் மேற்பட்ட காளை, பசு மாடுகள் சுற்றித்திரிகின்றன. காளைகள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொள்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தலையிட்டு மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.