சென்னையில் மதுபான பார் மூடப்பட்டதால் குரோம்பேட்டை நடைமேம்பாலத்தின் கீழ் பகுதியை மதுப்பிரியர்கள் பாராக மாற்றி குடிப்பதால் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்ளறனர்.
மதுப்பிரியர்கள் தாங்கள் வாங்கும் மதுவை பாரில் வைத்து குடிப்பது வழக்கம். ஆனால் பல இடங்களில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த பார்கள் மூடப்பட்டுவிட்டன. இதனால் மதுப்பிரியர்கள் தங்களுக்கு ஏதுவாக ஒரு சில இடங்களை தேர்வு செய்து அங்கேயே மதுவை அருந்துகின்றனர்.
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலை பேருந்து நிலையம் அருகே நடை மேம்பாலத்தின் அருகில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த மதுபான பார் மூடப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் தாங்கள் வாங்கும் மதுவை பொது இடங்களிலேயே குடிக்கிறார்கள்.
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலையை கடக்க கட்டப்பட்டுள்ள நடை மேம்பாலத்தின் கீழ் உள்ள இடத்தை மதுப்பிரியர்கள் குட்டி பாராக மாற்றி அங்கு வைத்து மதுவை குடித்து வருகின்றனர். இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்றனர்.