உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்றால், ரஷ்யாவின் கோரிக்கைகளை நிறைவேற்றியே ஆகவேண்டும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் ஏன் என்று கேட்டால் பெரும்பாலானோருக்கு நேட்டோதான் காரணம் என்று சொல்வதை காணலாம்… அதாவது நேட்டோ சொல்வதை உக்ரைன் கேட்கக்கூடாது. கேட்டதானால்தான் இந்த வினை என்பதும் பலருக்கும் தெரியும்… ஆனால் நேட்டோ என்பது என்ன? அது ஆங்கில வார்த்தையா, தமிழா நேட்டோ என்ற சொல்லின் விரிவாக்கம் என்ன என்பதிலேயே பல சாமான்ய மக்களுக்கு குழப்பம் உள்ளது. சரி…. யானை வரும் பின்னே… மணி ஓசை வரும் முன்னே என்பதைப் போல் போரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் நேட்டோ என்பதைப் பற்றி சற்றே தெரிந்துக் கொள்வோம்.
நேட்டோ என்றால் ஆங்கிலத்தில் The North Atlantic Treaty Organization என்று கூறுவார்கள். எனவே நேட்டோ என்பதன் ஆங்கிலச் சுருக்கம் NATO. அதாவது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு என்று கூட நாம் தமிழில் புரிந்து கொள்ளலாம். 1949-ல், உலகப் போருக்குப் பின்பு மேற்கொள்ளப்பட்ட, ஒப்பந்தங்களின் அடிப்படையில் உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு தான் நேட்டோ. இந்த கூட்டமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுக்கல் என 12 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இது மட்டுமின்றி அல்பேனியா, பெலாரஸ், ஜெர்மனி, செக் குடியரசு, போலந்து உள்ளிட்ட 30 நாடுகள் இந்த கூட்டமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் இந்த கூட்டமைப்பில் உள்ள ஏதேனும் ஒரு நாட்டின் மீது மற்ற நாடுகள் போர் தொடுத்தால் உடனடியாக இந்த கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் பாதிக்கப்படும் நாட்டிற்கு உதவ வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்.
எனவேதான் அண்டை நாடான ராணுவத்தில் பலம் வாய்ந்த ரஷ்யா போர் தொடுக்க வாய்ப்பு உள்ளது என்பதால் பாதுகாப்பைவே உறுதி செய்து கொள்ளவே நேட்டோ அமைப்பில் சேர விரும்புகிறது உக்ரைன். ஒருவேளை உக்ரைன் நேட்டோவில் இணைந்து விட்டால் தனக்கு பின்னால் ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது என்ற தைரியத்தில் ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று அச்சம் கொள்கிறது அந்நாட்டு அரசு. இது மட்டுமின்றி 1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் பிளவுபட்டபோது, நேட்டோவுக்கு எதிராக ரஷ்யா அமைத்திருந்த வார்சா ஒப்பந்த நாடுகளில், பல நேட்டோ படைகளில் இணைந்திருந்தது பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவேதான் ஐரோப்பிய கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நாடான உக்ரைன்,
நேட்டோ அமைப்பில் சேர்வதை ரஷ்யா விரும்பவில்லை. நேட்டோ அமைப்பில் உக்ரைன் எப்போதும் சேர்க்கமாட்டோம் என்ற உறுதிப்பாட்டை தங்களுக்கு வழங்க வேண்டும் என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் ரஷ்யாவின் கோரிக்கைகளுக்கு மேற்குலக நாடுகள் செவி சாய்க்கவில்லை. எனவேதான் வேறு வழியின்றி உக்ரைன் மீதான போரைத் தொடங்கியது ரஷ்யா. ஏற்கனவே சோவியத் யூனியன் பிளவுபட்டது போன்ற கசப்பான சம்பவத்தை ரஷ்யா விரும்பவில்லை, நேட்டோ அமைப்பு பலப்படுவதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட போட்டி நாடுகள், தங்கள் அதிகார வரம்பிற்குள் வந்து விடுவார்களோ என்ற அச்சம் ரஷ்யாவிற்கு இருந்து கொண்டேதான் இருக்கிறது.
இப்போது நிகழ்காலத்திற்கு வருவோம். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடங்கப்பட்டு 300 நாட்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் ஆரம்பத்தில் ஆதரவு எதிர்ப்பும் தெரிவித்து வந்த நாடுகள் கூட தற்போது இதுபற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை. பல ராணுவ வீரர்களையும், பொதுமக்களையும் பலி வாங்கிய ரஷ்யா, உக்ரைனின் டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க், ஜபோரிஜியா மற்றும் கெர்சன் மாகாணங்கள் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது.
இந்தப் போரால் பாதிக்கப்பட்டது உக்ரைன் ரஷ்யா மட்டுமல்ல, அந்நாட்டுடன் உறவு வைத்துள்ள மற்ற நாடுகளும்தான். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விளாடிமிர் புடின், அமெரிக்கா மீது குற்றம் சாட்டி உள்ளார். அதாவது “ரஷ்யாவை பலவீனப்படுத்தவே உக்ரைனை ஒரு போர்க்களமாக அமெரிக்கா பயன்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார். போரை நிறுத்த ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள புடின், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதான் எங்கள் இலக்கு என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பை உக்ரைன் நிராகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அதில் “உக்ரைனுக்கு எங்களின் கோரிக்கைகள் நன்கு தெரியும். அவற்றை நிறைவேற்றுவது உக்ரைனிய அதிகாரிகளின் கையில்தான் உள்ளது என்றும், இல்லையெனில் ரஷ்ய ராணுவம் இந்த பிரச்னையை தீர்மானிக்கும் என்றும் கூறி எச்சரித்துள்ளார்.