தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களின் சிறப்புகளை தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் இணையதள பக்கங்களை பார்வையிட்டு பொதுமக்கள் தெரிந்து கொள்வதுடன், வெளிநாடுகளில் வாழும் தங்கள் உறவினர்களுக்கு அவற்றை பகிரவேண்டும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசும்போது, சுற்றுலாத்துறையின் மூலம் தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்கள் குறித்த மிகச் சிறந்த குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூ டியூப் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த குறும்படங்கள் மற்றும் புகைப்படங்களை லட்சக்கணக்கானவர்கள் உலகம் முழுவதும் பார்வையிட்டுள்ளார்கள். சுற்றுலா தலங்களின் புகைப்படங்களை tamilnadutourism.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்வையிட்டு சிறப்புகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் தங்கள் உறவினர்களுக்கும் பகிர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.