மேட்டுப்பாளையத்தில் காட்டு யானை பாகுபலியை துன்புறுத்திய நபரை மேட்டுப்பாளையம் வனத்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறுவது வழக்கமாக உள்ள நிலையில், பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானையும் காட்டைவிட்டு வெளியேறியது. அதன் பின்னர் குடியிருப்புக்குள் புகுந்த பாகுபலி யானை விவசாய நிலங்களில் நடமாடி பயிர்களை நாசம் செய்தது.
இந்நிலையில் வனத்தில் இருந்து வெளியே வந்த யானையை வனத்துறையினர் விரட்டிக கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மர்ம நபர்கள் சிலர் பட்டாசு வீசி யானையை துன்புறுத்தினார்கள். அதுமட்டுமில்லாமல் குறிப்பாக நந்தவனப்புத்துர் பகுதியில் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட துப்பாக்கி போல் இருக்கும் கருவியில் உள்ளே உலோகத்தை வைத்தும் யானை தாக்கப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்திய வனத்துறை அதிகாரிகள், நெல்லிதுறையைச் சேர்ந்த ஜெகநாதன் என்ற விவசாயி யானையை தாக்கியது தெரியவந்தது. அவரை பிடித்த வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.