சேலம் மாவட்டம் ஆத்தூரில் சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை தந்தை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கெங்கவல்லி அருகே பள்ளக்காடு நடுவீதி பகுதியை சேர்ந்தவர் 85 வயதான வையாபுரி. இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூத்தமகன் இறந்துவிட்ட நிலையில் இரண்டாவது மகனுடன் துரைராஜூடன் வையாபுரி வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவர்களுக்கு இடையே 3 செண்ட் நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து மகனின் மனைவி மற்றும் பேரக்குழந்தைகள் கோவில் பண்டிகைக்காக சென்ற நிலையில், தந்தை மகனுக்கு இடையே சொத்து குறித்து மீண்டும தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபத்தின் உச்சிக்கு சென்ற தந்தை வையாபுரி, வீட்டின் அருகில் இருந்த மாட்டுக்கொட்டகையில் போதையில் தூங்கிக் கொண்டிருந்த மகன் துரைராஜை சுத்தியலால் பலமாக தாக்கியுள்ளார். தலையில் பலத்த காயமடைந்த துரைராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதன் பின்னர் கொலைக்கு பயன்படுத்திய சுத்தியலுடன் வையாபாரி கெங்கவல்லி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.