மகள் வயது குழந்தையை ஏமாற்றி குடும்பம் நடத்தி வந்த வந்த மீனவத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் மீனவத் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவருடைய வீட்டிற்கு அருகிலேயே 8ம் வகுப்பு படித்து வரும் மாணவியின் வீடும் உள்ளது. தந்தை வயதுள்ள செல்வகுமாரின் குழந்தைகளும் தனக்கு நண்பர்கள் என்பதால் சிறுமி அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். செல்வகுமாரும் அடிக்கடி சிறுமி வீட்டிற்கு வந்து போவதுமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சிறுமி காணாமல் போனார். போலீசாரும் சிறுமியின் பெற்றோரும் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.
இதற்கிடையே சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த செல்வகுமாரும் கடந்த சில நாட்களாக காணவில்லை. இதனால் போலீசாரின் சந்தேகம் அவர் பக்கம் திரும்ப, அவரது குடும்பத்தாரை விசாரித்துள்ளனர். செல்வகுமார் மீன்பிடி தொழில் சம்பந்தமாக வெளியூர் சென்றுள்ளதாக அவர்களும் கூறிவிட்டனர்.
மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் 37 வயதான மீன்பிடி தொழிலாளியான சிவகுமாரின் செல்போனின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர் நாகப்பட்டினத்தில் இருப்பதாக செல்போன் டவர் அடையாளம் காட்டியது. இதையடுத்து நாகை விரைந்த மகளிர் போலீசார் ஒரு வாடகை வீட்டில் செல்வகுமார், சிறுமியுடன் தங்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியை ஏமாற்றி அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த செல்வகுமாரை போக்சோ சட்டத்தில் அவர்களும் கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அவரை ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது செல்வகுமார் நீதின்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தந்தை எதற்காக சிறைக்கு சென்றார் என்று தெரியாமல் அவரது 3 குழந்தைகளும் அவரது வருகைக்காக ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.