திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் என்ன செய்வதென தெரியாமல் பொதுமக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மதுரவாசல் கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ வேணுகோபால் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தில் 9 குடும்பங்கள் வீடு கட்டி கடந்த 30 வருடங்களாக வாழ்ந்து வருகின்றது. இந் நிலையில் இந்த இடம் கோயிலுக்கு சொந்தமானது என்பதால் காலி செய்யுமாறு கடந்த 2017ம் ஆண்டு இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனாலும் வேறு எங்கும் செல்ல மனமின்றி கடந்த 5 ஆண்டுகளாக வீட்டை காலி செய்ய மறுத்து வந்தனர். இதனால் இந்து அறநிலைத்துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையான ஆணையை பெற்றனர். அதனைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர் சித்ராதேவி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த 9 வீடுகளுக்கு சீல் வைத்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.