ரயில் வருவதுக் கூடத் தெரியாமல் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த பனியன் கம்பெனி தொழிலாளர்கள் ரயில் மோதி உயிரிழந்த சோக சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.
செல்பி மோகம் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இந்த செல்பி மோகத்தால் அபாயகரமான பகுதிகளில் மக்கள் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து தங்களின் இன்னுயிரை இழக்கின்றனர். இவர்களின் மறைவு அவர்களின் குடும்பத்திற்கு பேரிழப்பாக இருக்கும் என்பதை உணராமலேயே இருப்பதுதான் பெரிய சோகம்.
திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநிலத்தைச் சேர்ந்த பாண்டியன், விஜய் ஆகிய 2 பேர் பணியாற்றி வந்தனர். இவர்கள் அணைப்பாளையம் பகுதியில் திருப்பூர் -கோவை செல்லும் ரெயில்வே தண்டவாளத்திற்கு அருகில் நின்று கொண்டு செல்பி எடுக்க முயற்சித்தனர்.
அப்போது அந்த தண்டவாளத்தில் ரெயில் வருவதை அறியாத 2 பேரும் செல்பி எடுத்துக் கொண்டிருந்து போது ரெயில் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற திருப்பூர் ரயில் நிலைய இருப்பு பாதை காவல் நிலைய போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பெரும்பாலானோர் தமிழகத்திற்கு பிழைப்பை தேடி வந்து கும்பல் கும்பலாக வசித்து வருகின்றனர். ஊர் விட்டு ஊர் சென்ற மகன் திரும்பி வருவான் என்று காத்திருக்கும் பெற்றோரையோ, கணவனுக்காக காத்திருக்கும் மனைவியையோ, தகப்பனுக்காக காத்திருக்கும் குழந்தைகளையோ நினைவில் வைத்து பொறுப்புடன் நடந்து கொண்டால் மட்டுமே இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க முடியும்.
செல்பி எடுக்க சென்ற உயிரை மாய்த்துக் கொண்ட 2 வட மாநில இளைஞர்களின் குடும்பங்களின் நிலைமை இனி என்னவாகுமோ என்று அப்பகுதி மக்கள் மிகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.