திமுக ஆட்சி காலத்தில்தான் சென்னை மாநகரத்தில் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக, கொளத்தூரில் நடைபெற்ற மேம்பால திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
சென்னை கொளத்தூர் ஸ்டீபன்சன் சாலையில் கட்டப்பட்ட மேம்பாலம், பூங்கா, மற்றும் வகுப்பறைகள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூலை 1ம் தேதி திறந்து வைத்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக ஆட்சியில்தான் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம், சென்னை மெட்ரோ ரெயில் திட்டம், செம்மொழி பூங்கா, வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம் என சென்னையில் திரும்பிய பக்கமெல்லாம் பாலங்கள் கொண்டுவரப்பட்டதாக குறிப்பிட்டார்.
மேலும், கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலம் 50 ஆண்டுகால வரலாற்றை தாங்கி நிற்கிறது என்றும், சென்னையில் மேம்பாட்டுக்காக திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இந்த பாலத்திற்கு செங்கை சிவம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தி.மு.க. செயற்குழு உறுப்பினராகவும், கலை இலக்கிய பேரவை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்த செங்கை சிவம், கடந்த 1996-2001-ம் ஆண்டு பெரம்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும், வீட்டு வசதி மற்றும் கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்தவர். இவர் கடந்த 2015ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.