தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி உறுதியாக உள்ளது என தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, அமலாக்கத்துறை மூலம் எத்தனை சோதனைகள் நடத்தினாலும் எவரும் அஞ்சப்போவதில்லை என கூறினார்.
பெங்களூருவில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தையும் ஒற்றுமையையும் கண்டு சகித்துக்கொள்ள முடியாத பாஜக அரசு, அமலாக்கத்துறை மூலம் அடக்குமுறையை ஏவி விட்டுள்ளதாக கே.எஸ்.அழகிரி விமர்சித்தார்.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் அலுவலகம் மற்றும் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டதற்கு கண்டனம் தெரிவித்த கே.எஸ். அழகிரி, விசாரணை என்ற போர்வையில் தற்போது அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறையை ஏவி, விசாரணை என்ற பெயரில் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய மத்திய அரசு, தற்போது அமைச்சர் பொன்முடியை குறிவைத்து அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுப்பதாக கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டினார்.