சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகையான தேங்காய் சுடும் திருவிழாவை பொதுமக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் கொண்டாடினர். புதுமணத் தம்பதியரும் தலை ஆடி மாதத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர் போன்ற காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் ஆடிமாதம் முதல் தினத்தை ஆண்டுதோறும் மிகவும் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.
அதிலும் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் தேங்காய் சுடும் பண்டிகை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நிகழ்ச்சி மகாபாரத கதையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1ஆம் தேதி தொடங்கி ஆடி 18ம் தேதியன்று முடிவுக்கு வந்தது என்றும் அதனை நினைவுகூரும் வகையில் ஆடி முதல் நாள் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி சேலம் மாவட்டம் மற்றும் மாநகர் பகுதிகளான அரிசிபாளையம், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேங்காய் சுடும் விழா கொண்டாடப்பட்டது. அப்போது மக்கள் தங்கள் வீடுகள் முன்பாக அவல், பொட்டுக்கடலை, நாட்டுசக்கரை, எள்ளு உள்ளிட்ட இனிப்பு பொருட்களால் நிரப்பிய தேங்காயை தீயில் சுட்டு, பின்னர் உறவினர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர். மேலும் திருமணமான புதுமண தம்பதிகளும் புத்தாடை அணிந்து ஜோடியாக தேங்காய் சுட்டு மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.