மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் தட்சிணாயன புண்ணிய காலத்தை முன்னிட்டு தங்கத்தேரில் சுவாமி திருவீதி உலா வரும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் தென் திருமலை திருப்பதி ஸ்ரீவாரி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆடி மாத பிறப்பினை முன்னிட்டு தட்சிணாயன புண்ணிய காலம் துவங்குவதையட்டி மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் தங்கத்தேரில் திருவீதி உலா வரும் வைபவம் நடைபெற்றது.
காலை 5.30 மணிக்கு சுப்ரபாதத்துடன் விஸ்வரூப தரிசனம், தோமாலை, சகஸ்ரநாம அர்ச்சனை, நிவேதனம், ஆரத்தியும், மலையப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது,
இதைத்தொடர்ந்து மாலை நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தியுடன் கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.