
ஆன்லைன் ரம்மில் பணத்தை இழந்ததால் கல்லூரி மாணவர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சோக சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே என்ஜீனியர் ஆகி விடலாம் என்ற எதிர்கால கனவுகளோடு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருபவர் மாணவர் சூர்யபிரகாஷ். செல்போனில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் போது மனதை சஞ்சலப்படுத்தும் விதமாக ஒரு விளம்பரம் வந்தது தமிழர்கள் சீட்டட்டம் என்று செல்லமாக அழைக்கும் சூதாட்டம் குறித்த விளம்பரம் தான் அது. செல்போனிலேயே ரம்மி விளையாடி தினமும் லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரம் சூரியபிரகாஷின் ஆசையை தூண்டியது.
இதை விளையாட மனமகிழ் மன்றங்கள் தேவையில்லை. மரத்தடி நிழல் தேவையில்லை. ஒதுக்குப்புறமாக இருக்கும் ஆள் அரவமற்ற இடம் தேவையில்லை நண்பர்களின் வீடுகளும் தேவையில்லை. ஸ்மார்ட் போன் எனும் 6 அங்குல உயரமுள்ள எமன் இருந்தால் போதும். இதை கையில் வைத்து கொண்டு வீடு, பேருந்து, ரயில், பொதுஇடம், கழிப்பிடம் போன்ற எல்லா இடங்களிலும் ஆன்லைன் ரம்மியை விளையாடி பணத்தை, மானத்தை இன்னும் சொல்லப் போனால் உயிரைக் கூட எளிதில் இழக்கலாம்.
அந்த வகையில் ஆன்லைன் ரம்மி எனும் எமன் அழையா விருந்தாளியாக விளம்பர வடிவில் சூரியபிரகாஷின் செல்போனுக்கு வந்தது. இந்த விளம்பரத்தை முதலில் நம்பாத சூரியபிரகாஷ் இது குறித்த விளம்பரங்களில் பிரபல கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகைகளும் வருவதை பார்த்து பிறகு நம்பியுள்ளார். அதிலும் ஒரு கிரிக்கெட் வீரர் “கிரிக்கெட்டிற்கு வராமல் இருந்திருந்தாள், ஆன்லைன் ரம்மியில் சாதித்து இருப்பேன்” என்று விளம்பரத்தில் பேசியது சூரியபிரகாசை மேலும் நம்ப வைத்தது.
இதுபோன்ற விளம்பரங்களை நம்பித்தான் ஆயிரக்கணக்கானோர் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து கடன் தொல்லையால் சமுகத்திற்கு பயந்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது வேறு விஷயம். இந்த விளம்பரத்தை நம்பிய சூரியபிரகாஷ் முதலில் இலவசமாக ஆன்லைன் ரம்மியை விளையாடி உள்ளார். அதில் தொடர்ந்து வெற்றி பெற்று பணம் சம்பாதிக்கவே படிப்பு செலவுக்காக பெற்றோர் கொடுத்த பணத்தை அதில் முதலீடு செய்து விளையாடி உள்ளார். வெற்றி, தோல்வி, மீண்டும் வெற்றி என பணம் போவதும் வருவதுமாக இருந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அதிக பணம் செலுத்தினால் அதானி, அம்பானி ஆகிவிடலாம் என்ற ஆசையோடு சக மாணவர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என அனைவரிடமும் கிட்டதட்ட 80,000 ரூபாய் வரை கடன் வாங்கி உள்ளார் சூரியபிரகாஷ். ஒரிரு நாளில் பணத்தை திருப்பி தருவதாக கூறியதால் அவரை நம்பி கடன் கொடுத்தனர். கடன் வாங்கி அடுத்தடுத்து ஆன்லைன் ரம்மியில் பணம் செலுத்தி சூதாட்டம் ஆடிய மாணவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அடுத்தது என்ன? கடன் கொடுத்தவர்கள் மாணவரின் சட்டையை பிடித்து பணம் கேட்க மனஉளைச்சலுக்கு ஆளாகி, பெற்றோரிடமும் தனக்கு நேர்ந்த அவலத்தை சொல்ல முடியாமல் மரணித்து விட முடிவு செய்து எமனிடமே சென்று விட முயற்சி மேற்கொண்டார். இதை அடுத்து தனியார் பொறியியல் கல்லூரி மாணவரான சூரியபிரகாஷ் விஷத்தை குடித்து விட்டார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணம் அடைய நாமும் பிரார்த்திப்போம்.
சமீபத்தில் சென்னை மணலியைச் சேர்ந்த பெண் ஒருவரும் ரயிலில் பயணம் செய்யும் போதெல்லாம் ரம்மி விளையாடி பணத்தை இழந்து,
கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து மக்களின் உயிரைக் காப்பாற்ற தமிழக அரசும் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. ஆன்லைன் ரம்மியில் எதிர் தரப்பில் விளையாடுவது மனிதர்கள் அல்ல. கம்ப்யூட்டரிடம்தான் விளையாடுகிறோம் என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும். கம்ப்யூட்டரிடம் விளையாடி ஜெயிப்பது இயலாத காரியம். முதலில் நீங்கள் ஜெயிப்பது போல் ஆசையை தூண்டிவிட்டு பின்னர் உங்கள் பணத்தை பறிப்பதே அதன் நோக்கம்.