உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கு தற்போது 82 வயதாகிறது. அவர் கடந்த 3 ஆண்டுகளாக உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு அதற்கான சிகிச்சைகளை பெற்று வந்தார். பிரதி மாதம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்து வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசம் அடையவே கடந்த ஜூலை மாதம் முதல் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே ஆகஸ்ட் 22ம் தேதி முதல் அவரது ஆக்ஸிஜன் அளவு குறையவே அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் சிறுநீரக தொற்று மற்றும் இரத்த அழுத்தம் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக உயிருக்கு போராடி வருகிறார்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவிடம் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர். சிகிச்சைக்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் பிரதமர் உறுதியளித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன..