-பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு.
தமிழகம் முழுவதும் ஆவின் பால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும், அவ்வாறு விற்பனை செய்யும் பால் முகவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கிறது.
ஆவின் பால் விநியோகத்தை பொறுத்தவரை இணையம் என்றழைக்கப்படும் சென்னையில் மொத்த விநியோகஸ்தர்கள், பால் முகவர்கள், சில்லறை வணிகர்கள் என மூன்று தரப்பினரும், ஒன்றியம் என்றழைக்கப்படும் மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டத்தில் பால் முகவர்கள், சில்லறை வணிகர்கள் என இரண்டு தரப்பினர் மூலமும் நடைபெற்று வருவதோடு இரண்டு, மூன்று தரப்பினர் மூலம் நுகர்வோரை சென்றடையும் ஆவின் பால் விற்பனைக்கான லாப தொகை என்பது நீண்டகாலமாகவே சொற்ப அளவில் குறிப்பாக ஒரு லிட்டருக்கு வெறும் 2.00ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் பால் விநியோகம், விற்பனை செய்வதற்கான வாகன எரிபொருள், பணியாளர் சம்பளம், கடை வாடகை, மின்கட்டணம் உள்ளிட்ட செலவினங்கள் கடுமையாக உயர்ந்துள்ளதாலும், ஆவின் பால் விநியோகத்தில் தினசரி வரும் லீக்கேஜ் பால் பாக்கெட்டுகளால் ஏற்படும் இழப்புகளும் பால் முகவர்களுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தினாலும் கூட ஆவின் பால் விநியோகத்தை கிட்டத்தட்ட சேவை சார்ந்த பணியாக நினைத்தே செய்து வருகின்றனர்.
நிலைமை இவ்வாறு இருக்கும் போது மூன்று தரப்பினருக்கான லாப தொகையை சொற்ப அளவில் கொடுத்து விட்டு, லீக்கேஜ் பால் பாக்கெட்டுகளால் ஏற்படும் இழப்புகளையும் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு வணிக சந்தையில் உள்ள உண்மையான கள நிலவரம் குறித்து மேல்மட்ட அதிகாரிகளுக்கு அறிக்கை கொடுத்து அதற்கான தீர்வு காண ஆவின் நிர்வாகம் சிறிதளவு கூட முயல்வதில்லை. மாறாக ஆவின் பால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ஊடகங்களிலோ, சமூக வலைதளங்களிலோ செய்திகள் வந்து விட்டால் அவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்யும் பால் முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், ஆவின் பாலகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என மொத்த விநியோகஸ்தர்களோடு கூட்டு சேர்ந்து கொண்டு எச்சரிக்கை விடுப்பதையும், பாலகங்களின் உரிமத்தை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுப்பதையும் மட்டும் வாடிக்கையாக கொண்டிருக்கிறது ஆவின் நிர்வாகம்.
பால் கொள்முதல், இயந்திரங்கள், பாலிதீன் கவர் கொள்முதல், பணியாளர் நியமனம் என பல்வேறு நிலைகளில் ஆவினில் மலைபோல் நடக்கும் ஊழல்களை எல்லாம் கண்டு கொள்ளாமலும், ஆவின் பால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் விற்பனை செய்வதற்கான காரணம் என்ன..? அதனை சரி செய்ய என்ன செய்யலாம்..? ஆவின் பால் நுகர்வோருக்கு சென்றடையும் வரை எவ்வளவு லாபத் தொகை வழங்கினால் இது போன்ற பிரச்சனைகள் எழாது..? என்பதை பற்றியெல்லாம் அலசி ஆராயாமலும், தனியார் பால் நிறுவனங்களைப் போல் மொத்த விநியோகஸ்தர்கள் என்கிற இடைத்தரகர்கள் முறை இல்லாமல் ஒன்றியங்களில் செயல்படுத்தப்படும் நடைமுறைகளை இணையத்திலும் எப்படி செயல்படுத்தலாம்..? என முயற்சி செய்யாமலும், பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்குதடையின்றி கொண்டு போய் சேர்க்கும் பால் முகவர்கள், சில்லறை வணிகர்களுக்கான விற்பனை லாப தொகையை நியாயமான அளவில் வழங்க முயற்சி செய்யாமலும் இருந்து விட்டு கடுகு அளவில் நடப்பவற்றை பூதக்கண்ணாடி கொண்டு பெரிதாக்கி தங்களின் மீதான தவறுகளை, ஊழல், முறைகேடுகளை ஆவின் நிர்வாகம் மூடி மறைக்கப் பார்க்கிறது.
தமிழகத்தில் பெரும்பான்மையான தனியார் பால் நிறுவனங்களை எடுத்துக் கொண்டால் தமிழகம் முழுவதும் மொத்த விநியோகஸ்தர்கள் என்கிற நடைமுறை இல்லாமல் பால் முகவர்கள், சில்லறை வணிகர்கள் என இரண்டு தரப்பினர் மூலம் மட்டுமே பால் விநியோகம் நடைபெற்று வருவதோடு விற்பனைக்கான லாப தொகையை உழைப்பிற்கேற்ற வருமானம் என்கிற அடிப்படையில் வழங்கி வருகின்றன.
அது போல தனியார் பால் நிறுவனங்கள் பால் முகவர்களோடு நேரடி வர்த்தக தொடர்புகளை கொண்டு முறையான பில் வழங்கப்பட்டு வருவதால் பால் முகவர்கள் அனைவருக்கும் ஒரே விலை என்கிற அடிப்படையிலேயே விநியோகம் நடைபெற்று வருகிறது. அதனால் தனியார் நிறுவனங்களின் பால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் விற்பனை செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே ஆவின் பால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் விற்பனை செய்யப்படுவது நிரந்தரமாக தடுக்கப்பட வேண்டுமானால் ஆவின் மாவட்ட ஒன்றியங்களில் இருப்பதைப் போல ஆவின் நிர்வாகம் இணையத்திலும் பால் முகவர்களோடு நேரடியான வர்த்தக தொடர்புகளை கொண்டிருக்க வேண்டும்.
அத்துடன் தனியார் பால் நிறுவனங்களைப் போல் பால் முகவர்கள், சில்லறை வணிகர்களுக்கு பால் விற்பனைக்கான லாப தொகையை நியாயமான அளவில் நிர்ணயம் செய்து குறைந்தபட்சம் லிட்டருக்கு 5.00ரூபாயாவது வழங்கிட வேண்டும்.
அதுமட்டுமின்றி லீக்கேஜ் பால் பாக்கெட்டுகளால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய மாதந்தோறும் குறிப்பிட்ட சதவீதம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். இதையெல்லாம் ஆவின் நிர்வாகம் பரிசீலித்து நிறைவேற்றுமானால் எந்த ஒரு புகாரும் நுகர்வோர் தரப்பில் இருந்து எழாமல் பால் விற்பனையும் கணிசமாக உயரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.