கர்நாடகாவில் அன்ன பாக்யா உத்தரவாதத்தை செயல்படுத்தவிடாமல் மத்திய அரசு தடுத்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அன்ன பாக்யா திட்டத்திற்கு மத்திய அரசு அரிசி வழங்க மறுத்துவிட்டது.
ஜூன் 23ம் தேதியன்று இந்த அறிவிப்பு வெளியான நிலையில், ஜூலை 1-ம் தேதி தொடங்கப்பட இருந்த திட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது மத்திய அரசு வழங்கும் ஐந்து கிலோவுக்கு மேல் BPL கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு தலா ஐந்து கிலோ அரிசி வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் மாதத்திற்கு சுமார் 2.29 லட்சம் மெட்ரிக் டன்கள் கூடுதலாக அரிசி தேவைப்படும் நிலையில், இந்தத் திட்டத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் அன்ன பாக்யா உத்தரவாதத்தை செயல்படுத்தவிடாமல் மத்திய அரசு தடுத்து வருவதாகவும், எத்தனை தடைகள் வந்தாலும் கர்நாடக மக்களுக்கு மாநில அரசின் 10 கிலோ இலவச அரிசி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள ஏழைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக வாக்குறுதி அளிக்கப்பட்டாலும் பாஜகவிற்கு வாக்களிக்காமல் இருந்ததற்காக மக்களை பிரதமர் மோடி தண்டிக்கிறார் எனவும் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார்.
கர்நாடகா மக்களுக்கு காங்கிரஸ் உத்தரவாதம் அளித்த அன்ன பாக்யா திட்டத்தை செயல்படுத்த விடாமல் இடையூறு செய்வதையே இலக்காக கொண்டு மோடி அரசு செயல்படுவதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டினார்.