ஹனிமூன் கொண்டாட சென்னையில் இருந்து இந்தோனோசியா சென்ற டாக்டர் தம்பதியினர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் டாக்டர் விபூஷ்ணியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த லோகேஸ்வரன் என்ற டாக்டருக்கும் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து தேனிலவை கொண்டாட இந்தோனேசியா நாட்டிற்கு புதுமணத் தம்பதியினர் சென்றுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள
சுற்றுலா தளத்திற்கு சென்ற அவர்கள் கடலில் மோட்டார் படகில் சென்றபடி புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.
படகில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று நிலை தடுமாறி இருவரும் நீரில் மூழ்கினர். இதையடுத்து பொதுமக்கள் தந்த தகவலில் சென்ற கடலோர காவல்படையினர் நீண்ட நேரம் போராடி லோகேஸ்வரனை சடலமாக மீட்டனர்.
விபூஷ்னியாவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீண்ட நேரம் ஆகியும் விபூஷ்ணியாவின் உடல் கிடைக்காததால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இருவரது வீட்டிற்கும் இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கதறி அழுதனர். திருமணம் முடித்து 10 நாட்களேயான நிலையில் டாக்டர் தம்பதிக்கு ஏற்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.