மண் வளத்தை அறிந்து, அதற்கேற்ற வகையில் உரமிடும் முறையினை ஊக்கப்படுத்துவதற்காக தமிழ் மண்வளம் என்ற இணைய முகப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விளைநிலங்களின் மண்வளத்தை மேம்படுத்தும் வகையில், கடந்த 2022&23ம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், தமிழ் மண்வளம் என்ற இணைய முகப்பு உருவாக்கப்படும் என்று வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் மண்வளம் என்ற இணைய முகப்பை, விவசாயிகளின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். விவசாயிகள் கணினி மற்றும் செல்போன் மூலமாக http//tnagriculture.in/manvalam என்ற இணையதளத்தை அணுக முடியும். விவசாயிகள் தங்கள் மாவட்டம், வட்டாரம், கிராமம், தங்களது நிலத்தின் புல எண், உட்பிரிவு எண்ணை பதிவு செய்தால், உடனடியாக மண்வளம் குறித்த அனைத்து தகவல்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அவர்களது செல்போனில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மண்வள அட்டையாக மின்னணு வடிவில் கிடைக்கும்.
மண்ணின் தன்மை, நிலத்திடி நீரின் வகைப்பாடு, உப்பின் நிலை உள்ளிட்ட விவரங்களும், தழை, மணி சாம்பல் சத்துக்கள் போன்ற விவரங்களும், கந்தகம், இரும்பு உள்ளிட்ட நுண்ணூட்டச் சத்துக்களின் விவரங்களை பரிந்துரைகளாக விவசாயிகள் பெறும் வகையில் தமிழ் மண்வளம் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.