அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் மனிதச் சங்கிலி போராட்டதில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்ட தொடர் பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் முதல் கூட்ட தொடர் நிறைவு பெற்றது.
இந்நிலையில் பட்ஜெட் அமர்வின் இரண்டாம் பகுதி மார்ச் 13ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரம் பற்றி ஆளும் கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.மேலும் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். இது தொடர் அமளிக்கு வழிவகுத்ததால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதே பிரச்சனை காரணமாக அடுத்தடுத்து 2 நாட்கள் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், 4வது நாளான இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதானி விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் தமிழக எம்பிக்கள் கார்த்தி ப.சிதம்பரம், திருமாவளவன், விஜய் வசந்த் ஆகியோர் கையில் பதாகைகள் ஏந்தி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.