கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்! – ராமதாஸ்

2020-ஆம் ஆண்டில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான தவணையையும் சேர்த்து கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

- Advertisement - WhatsApp

தேசிய அளவில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வருமான வரம்பு இன்று வரை உயர்த்தப்படவில்லை. எனவே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உயர்கல்வி வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான இந்த நடவடிக்கையை மத்திய அரசு தாமதப்படுத்துவது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1990-ஆம் ஆண்டில் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட போது, அதற்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. ஓபிசி இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தான் கிரீமிலேயர் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் கிரீமிலேயர்களாக கருதப்பட்டு, அவர்களுக்கு ஓபிசி இட ஒதுக்கீடு மறுக்கப்படும். இன்றைய நிலையில் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளவர்கள் கிரீமிலேயர்கள் ஆவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் மாற்றியமைக்கப்பட வேண்டிய கிரீமிலேயர் உச்சவரம்பு கடந்த 5 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என்பது தான் மிகவும் வருத்தமளிக்கும் உண்மை என தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், கடைசியாக கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி கிரீமிலேயர் வரம்பு ரூ. 6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்பின் கடந்த 2020-ஆம் ஆண்டில் கிரீமிலேயர் வரம்பு குறைந்தது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பெருந்தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களைக் காட்டி கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படவில்லை. அதன்பின் கொரோனா தொற்று கிட்டத்தட்ட முற்றிலுமாக விலகி விட்ட நிலையில், இரு ஆண்டுகளாக கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

- Advertisement - WhatsApp

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வரும் 7-ஆம் தேதியும், ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கைக்கான கூட்டு நுழைவுத் தேர்வு (அட்வான்ஸ்டு) முடிவுகள் வரும் 11-ஆம் தேதியும் வெளியிடப்படவுள்ளன. மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் 7-ஆம் தேதி வாக்கில் வெளியிடப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றுக்குப் பிறகு மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இம்மாத இறுதியில் மாணவர் சேர்க்கை தொடங்கும். அதற்கான நடைமுறைகள் நடப்பு மாதத்தின் மத்தியில் தொடங்கக்கூடும். அதற்கு முன்பாக கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படாவிட்டால், கடந்த ஆண்டுகளில் வருமானம் உயர்ந்த பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தகுதியும், திறமையும் இருந்தாலும் கூட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர இயலாது. இது பெரும் சமூக அநீதி.

1993-ஆம் ஆண்டில் ரூ. 1 லட்சமாக இருந்த கிரீமிலேயர் வரம்பு 2004-ஆம் ஆண்டில் 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அப்போது பணவீக்கமும், வருமானமும் உயராததால் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட 11 ஆண்டுகள் ஆயின. அதன்பின் 2008-ஆம் ஆண்டில் ரூ.4.5 லட்சம், 2013-ஆம் ஆண்டில் ரூ. 6 லட்சம், 2017-ஆம் ஆண்டில் ரூ. 8 லட்சம் என 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டு வந்து கொண்டு தான் இருந்தது. இந்த முறை தான் 5 ஆண்டுகளாகியும் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படவில்லை. இந்த சமூக அநீதியை மத்திய அரசு உடனடியாக போக்க வேண்டும்.

ஓபிசி கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற வல்லுனர் குழு பரிந்துரைக்கு 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மத்திய அமைச்சரவை ஒப்புதலைப் பெறுவதற்கான முயற்சிகள் நடந்தன. அதனால் தான் அப்போது கிரீமிலேயர் வரம்பை உயர்த்துவது தடைபட்டது. கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியத்தையும் சேர்க்கலாம் என்ற யோசனை எழுப்பப்பட்டபோது, அதை எதிர்த்து தமிழகத்திலிருந்து முதல் குரலை எழுப்பியது நான் தான். அதன்பின் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு அமைப்புகள் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்ததால், வல்லுனர் குழு பரிந்துரை மீது முடிவெடுப்பதை மத்திய அரசு முதலில் கிடப்பில் போட்டது; பின்னர் நிராகரித்து விட்டது.

அதனால், கிரீமிலேயர் வருமான வரம்பை இப்போது உயர்த்துவதற்கு எந்தத் தடையும் கிடையாது. எனவே, 2020-ஆம் ஆண்டில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான தவணையையும் சேர்த்து கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்த வேண்டும். அதன்மூலம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூகநீதியை மத்திய அரசு காக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

சிஏஜி விவகாரம்… அரசு மீது சந்தேகம்: டெல்லி அரசை கண்டித்த ஐகோர்ட்

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிஏஜியின் அறிக்கைக்கு தாமதமாக பதில் தந்ததற்காக ஆம் ஆத்மி அரசுக்கு டெல்லி ஐகோர்ட் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது.வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லி...