டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிஏஜியின் அறிக்கைக்கு தாமதமாக பதில் தந்ததற்காக ஆம் ஆத்மி அரசுக்கு டெல்லி ஐகோர்ட் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லி மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந் நிலையில், டெல்லி அரசின் மதுபானக் கொள்கை தொடர்பாக சிஏஜியின் அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த அறிக்கையில், மதுபான கொள்கை முறைகேடு காரணமாக அரசுக்கு 2,026 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
சிஏஜியின் அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்காக ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசை டெல்லி ஐகோர்ட் கண்டித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட் நீதிபதி சச்சின் தத்தா அமர்வு, “ஆளுநருக்கு அறிக்கைகளை அனுப்புவதில் ஏற்பட்ட தாமதமும், இந்த விஷயத்தை நீங்கள் கையாள்வதும் உங்கள் நேர்மை குறித்து சந்தேகங்களை எழுப்புகிறது. இந்த விவகாரத்தை தொடர்ந்து இழுத்தடிப்பது துரதிர்ஷ்டவசமானது.
நீங்கள் உடனடியாக அறிக்கைகளை சபாநாயகருக்கு அனுப்பி, இது குறித்த விவாதத்தை பேரவையில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அதை செய்யவில்லை.” என்று சாடியுள்ளது.
சபாநாயகர் சிறப்பு அமர்வை கூட்ட உத்தரவிடுமாறு பாஜக எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தை வலியுறுத்தினர். ஆனால், சபாநாயகருக்கு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிமன்றம் முடிவெடுப்பதற்கு முன்னர் இரு தரப்பினரையும் விசாரிக்க வேண்டும் என்றும் கூறியது. இதனிடையே இதில் அரசியல் நோக்கம் உள்ளது என்றும் எதிர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய திட்டமிட்டி இருப்பதாகவும் ஆம் ஆத்மி அரசு கூறியுள்ளது.