நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.
திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம் அறக்கட்டளையின் நல்லெண்ணத் தூதுவராகவும் செயல்பட்டு வருகிறார். 2020ல் மகிழ்மதி இயக்கத்தை தொடங்கிய திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வசதி வாய்ப்பு இல்லாத குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
திவ்யா சத்யராஜ் அரசியல் களத்தில் குதிப்பார் என நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்தது. அதற்கு காரணம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட கட்சி ஒன்று அழைப்பு விடுத்தது. ஆனால் அது மதச்சார்புள்ள கட்சி என்பதால் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக திவ்யா தெரிவித்திருந்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அரசியலுக்கு வர உள்ளதாகவும் தான் இணைய உள்ள கட்சி எதுவென்று பின்னர் தெரிவிப்பதாகவும் பேட்டி அளித்திருந்தார்.
இந்நிலையில் ஜனவரி 19, 2025ம் தேதியான இன்று திவ்யா சத்யராஜ் திமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்திற்கு திமுகவின் கட்சி கொடியின் கருப்பு – சிவப்பு நிற சேலை அணிந்து வந்தார்.
அதன் பின்னர் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திவ்யா சத்யராஜ் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்நிகழ்வின்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.