25% வரை மின் கட்டணம் உயர்த்தப்போவது மத்திய அரசு!

மின்சார நுகர்வோர் உரிமைகள் விதிகள், 2020 இல் மத்திய அரசு திருத்தம் செய்திருப்பதன் மூலம், டைம் ஆஃப் டே மின் கட்டண முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே மின் கட்டணம் 25 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதிய நடைமுறையின் கீழ், மின்சாரத்திற்கு செலுத்தும் கட்டணம், நாளின் நேரத்திற்கு ஏற்ப மாறுபடும். அதன்படி, மின்சாரத்திற்கான உச்ச தேவை இருக்கும் நேரங்களில் மின் கட்டணம் வழக்கத்தை விட 10 முதல் 20 சதவீதம் அதிகமாக இருக்கும். சூரியஒளி கிடைக்கும் சாதாரண நேரங்களில் தற்போது வசூலிக்கப்படும் சாதாரண கட்டணத்தை விட 20% வரை குறைவாக இருக்கும்.

- Advertisement - WhatsApp

2024 ஏப்ரல் 1 முதல் வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு இந்த புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வருகிறது. 2025 ஏப்ரல் 1 முதல் விவசாய நுகர்வோர் தவிர மற்ற அனைத்து நுகர்வோருக்கும் இந்த கட்டணம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

மத்திய அரசு கொண்டுவந்த மின்சார சட்டம் மற்றும் அதன் அடிப்படையிலான மின்சார (நுகர்வோர் உரிமை) விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று அஞ்சினோமோ, அவை அனைத்தும் நடைமுறைக்கு வரத் தொடங்கிவிட்டன. முதல்கட்டமாக, 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வணிகப் பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கும், 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வீடுகளுக்கான மின் இணைப்புகளுக்கும் அதிக மின் பயன்பாட்டு நேரங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது கடுமையான பொருளாதார தாக்குதலைத் தொடுக்கும் இந்த நடவடிக்கை பெரும் அநீதி ஆகும்.

- Advertisement - WhatsApp

தமிழ்நாட்டில் காலை மற்றும் மாலை வேளைகளில் 6 மணி முதல் 10 மணி வரையிலான 5 மணி நேரத்தை அதிக மின்பயன்பாட்டு நேரமாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே அறிவித்திருக்கிறது. மின்சார (நுகர்வோர் உரிமை) விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி இந்த நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு வழக்கமான கட்டணத்திலிருந்து 25% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல், அதிக மின்சார பயன்பாடு இல்லாத நேரமான இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான 7 மணி நேரத்திற்கு 5 விழுக்காடு கட்டணம் குறைவாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் தான் அனைத்து மின்சாரக் கருவிகளும் பயன்படுத்தப்படும். அலுவலகத்திற்கு புறப்படுவது, அலுவலகம் விட்டு வீடு திரும்பிய பிறகு தொலைக்காட்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு கருவிகளை பயன்படுத்துவது உள்ளிட்டவை இந்த நேரத்தில் தான் நடைபெறும். அதிக மின்சார பயன்பாட்டு நேரத்தில் மின்சாரத்தின் பயன்பாட்டைக் குறைப்பதற்காகத் தான் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மத்திய அரசின் விதிகள் கூறுகின்றன. இது நடைமுறை சாத்தியமற்றது. அதிகபயன்பாட்டு நேரத்தில் மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அதிகாலை 5 மணிக்கு முன்பாக அலுவலகத்திற்கு ஆயத்தமாவதோ, இரவு 10 மணி மேல் பொழுதுபோக்குக் கருவிகளை பயன்படுத்துவதோ எப்படி சாத்தியமாகும்?

வீடுகளின் மொத்த மின்சாரப் பயன்பாட்டில் 70%, காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 10 மணி வரையிலுமான 10 மணி நேரத்தில் தான் நடைபெறுகிறது. அதிக மின்சார பயன்பாடு இல்லாத நேரமான இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான 7 மணி நேரத்தில் 10% -&15% மின்சாரம் கூட பயன்படுத்தப்படுவதில்லை. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலான நேரத்தில் வழக்கமான மின்சாரக் கட்டணம் தான் வசூலிக்கப்படும். 10 விழுக்காடு மின்சாரப் பயன்பாட்டுக்கு 5% கட்டண சலுகை வழங்கிவிட்டு, 70% மின்சாரப் பயன்பாட்டுக்கு 25% கூடுதல் கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? இது மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 25% உயர்த்துவதாகவே பொருளாகும். நுகர்வோரை கசக்கிப் பிழியும் இந்த நடவடிக்கைக்கு மின்சார நுகர்வோர் உரிமை விதி என்று பெயரிட்டிருப்பது முரண்பாடு ஆகும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அண்மைக்காலங்களில் செய்யப்பட்ட மின்சாரக் கட்டண உயர்விலிருந்து பொதுமக்களாலும், தொழில் துறையினராலும் மீண்டு வர முடியவில்லை. இத்தகைய சூழலில் 70% மின்சாரப் பயன்பாட்டுக்கு மறைமுக கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவது ஏழை மற்றும் நடுத்த மக்களுக்கு தாங்க முடியாத பொருளாதார சுமையை ஏற்படுத்தி விடும். தொழில்துறையினராலும் இதை தாக்குப் பிடிக்க முடியாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அதிக மின் பயன்பாட்டு நேரங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற விதிகள் திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மக்களை பாதிக்கும் மின் விதிகள் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, மத்திய அரசின் மின்சார விதிகள் திருத்தத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தக்கூடாது; கூடுதல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்றும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

மாநகராட்சி வேண்டாம்: ஊராட்சியே போதும்: குமுறும் மக்கள்

மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி எல்லையோடு இணைக்க தமிழக அரசு சில...