ஈழ தமிழர்களுக்கு நீதி! இராமதாஸ் வரவேற்பு!

இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் இந்தியாவின் நிலை வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் இராமதாஸ் அது போதுமானதல்ல என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை சிங்கள ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவில்லை; இனியும் தாமதிக்காமல் அதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் இந்தியாவின் நிலை வரவேற்கத்தக்கது; ஆனால், போதுமானதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement - WhatsApp

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 51-ஆவது கூட்டத்தில் நேற்று உரையாற்றிய இந்திய தூதர்,‘‘ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 13-ஆவது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துதல், மாகாண அவைகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குதல், நீண்டகாலமாக தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் மாகாண அவைகளுக்கு உடனே தேர்தல் நடத்துவதல் ஆகியவற்றின் மூலம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், அளவிடக்கூடிய முன்னேற்றம் எதையும் இலங்கை அரசு எட்டவில்லை’’ என்று குற்றஞ்சாட்டினார். ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு; இதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையில் சிங்களர்கள் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும்; இலங்கை ஆட்சியாளர்களின் மனதில் இருந்து சிங்கள பேரினவாத உணர்வையும், தமிழர்கள் வெறுப்பு மனநிலையையும் அகற்ற முடியாது என்ற சூழலில் இலங்கை இனச்சிக்கலுக்கு தனித்தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு என்று பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக நம்புகிறது. ஆனால், அதற்கான அரசியல் மற்றும் சட்டரீதியான பயணம் மிக நீண்டது என்பதால், அதுவரை ஈழத்தில் வாழும் தமிழர்கள் கண்ணியமாகவும், சுதந்திரமாகவும் வாழ வகை செய்ய வேண்டும்; அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பெருங்கடமை இந்தியாவுக்கு உண்டு என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இத்தகைய சூழலில் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தியிருப்பது மனநிறைவை அளிக்கிறது.

ஆனால், இந்தியாவின் இந்த வலியுறுத்தல் மட்டுமே ஈழத்தமிழர்களுக்கு அதிகாரத்தை பெற்றுத் தந்து விடாது என்பதை இந்தியா உணர வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு ஓரளவாவது அதிகாரத்தை வழங்குவதற்கான 13-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 1987-ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து செய்யப்பட்டதாகும். இந்தியா நினைத்திருந்தால் 13-ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை அடுத்த சில ஆண்டுகளில் செயல்படுத்தி தமிழர்களுக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுத்திருக்க முடியும். ஆனால், அதன்பின் 35 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை; அரைகுறை அதிகாரங்களுடன் ஏற்படுத்தப்பட்ட மாகாண அவைகளும் முடக்கப்பட்டு விட்டன, வடக்கு – கிழக்கு மாநிலங்களின் இணைப்பும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இப்படியாக ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான இந்தியாவின் முயற்சி ஒரு செ.மீ கூட நகராமல் முடங்கிக் கிடக்கிறது.

- Advertisement - WhatsApp

பன்னாட்டு அவைகளிலும், இரு தரப்பு பேச்சுகளின் போதும், 13-ஆவது அரசியலமைப்புச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று இந்தியா இதுவரை நூறு முறை வலியுறுத்தியிருக்கும். இப்போது 101-ஆவது முறையாக வலியுறுத்துவதால் மட்டும் எந்த பயனும் ஏற்பட்டுவிடாது. மாறாக, இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து ஈழத்தமிழர்களுக்கு குறைந்தபட்ச அதிகாரத்தையாவது பெற்றுத்தர வேண்டும்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, அதன் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட இந்தியாவைத் தான் நம்பியிருக்கிறது. இத்தகைய சூழலில், 13-ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் அம்சங்களை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்; அவற்றில் ஏற்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில் தான் உதவிகளை வழங்க முடியும் என்று நிபந்தனை விதிப்பதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தர இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்திய இந்தியா, அங்கு நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்களை தண்டிப்பது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது. இலங்கை இனப்படுகொலைகள் நிகழ்ந்து 13 ஆண்டுகள் ஆகியும் அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாததை ஏற்க முடியாது.

இலங்கை போர்க்குற்ற விசாரணையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த புதிய தீர்மானம் வரும் 23-ஆம் தேதி ஐ.நா. மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அக்டோபர் 6-ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்கும் வகையில், புதிய தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

சிஏஜி விவகாரம்… அரசு மீது சந்தேகம்: டெல்லி அரசை கண்டித்த ஐகோர்ட்

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிஏஜியின் அறிக்கைக்கு தாமதமாக பதில் தந்ததற்காக ஆம் ஆத்மி அரசுக்கு டெல்லி ஐகோர்ட் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது.வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லி...