பள்ளி செல்லும் பாதையில் யானைகளின் அச்சுறுத்தல் இருப்பதால் பேருந்து வசதி கேட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி குழந்தைகள் மனு அளித்தனர்.
தேன்கனிக்கோட்டை அருகே, கெட்டூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி குழந்தைகள் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொம்மதாதனூர் அரசு பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர்.
பேருந்து வசதி இல்லாததால் பள்ளி குழந்தைகள் நடந்து செல்லும் நிலை உள்ளது என கூறப்படுகிறது. பள்ளி சென்று வரும் பாதை யானைகள் நடமாட்டம் உள்ள காட்டு வழி பாதை என்பதால், பள்ளி குழந்தைகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெற்றோருடன் வந்த பள்ளி குழந்தைகள், ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவில், காட்டு யானைகளிடமிருந்து தங்களை பாதுகாக்கவும், பள்ளி சென்று வர பேருந்து வசதி செய்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.