பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், ஆலயங்கள், வழிபாட்டு தளங்கள் அருகில் மது கடைகள் இருப்பதாக புகார் வந்தால் ஆய்வு செய்து அவை மூடப்படும் என மது விலக்கு மற்றும் ஆய்த்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காமராஜர் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை, வீட்டு வசதி மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதை அடுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், கலைஞர் மருத்துவ காப்பீடு அட்டைகளையும் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்துசாமி, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தளங்கள் அருகில் உள்ள மதுபான கடைகளை, அகற்றுவது குறித்து பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை ஆய்வு செய்ய உள்ளோம் என்றும், அதன் பிறகு அந்த கடைகளை அகற்றுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையே இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ள அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் கடைகளில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்றால் பணிநீக்கம் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.