செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள மாமண்டூர் பகுதியில் அரசு பேருந்து ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில் 4 கி.மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
மதுராந்தகம் அருகே உள்ள மாமண்டூர் என்ற இடத்தில், திருவாரூரில் இருந்து அரசு விரைவு பேருந்து ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அதன் முன்பு சென்று கொண்டிருந்த அரசு சொகுசு பேருந்து மீது அரசு விரைவுப் பேருந்து பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த திருவாரூர் பகுதியை சேர்ந்த குமார் என்ற பயணி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற படாளம் போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் விபத்தில் சிக்கிய பேருந்துகளை அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டனர்.
திங்கட்கிழமை வாரத்தின் முதல் வேலைநாள் என்பதால் வழக்கத்திற்கு அதிகமாக வாகனங்கள் அப்பகுதியில் அணிவகுத்து நின்ற நிலையில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் அவதியடைந்தனர்.