தமிழ்நாட்டில் 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப் 4 தேர்வுகளை எழுதிவிட்டு, அதற்கான முடிவு எப்போது வெளியிடப்படும் என காத்திருக்கின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருக்கும் 6,224 பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9ஆம் தேதி நடத்தப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி நடத்திய இந்த தேர்வில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தான் என்றாலும், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் என பலரும் பங்கேற்று தேர்வை எழுதினர்.
இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கு முன்பாக, அக்டோபர் மாதத்திலேயே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி-யின் சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்படும் என்ற அறிவிப்பால், தேர்வெழுதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 3 மாதங்களுக்கு முன்பே தேர்வு முடிவுகள் வெளியாவதால், அரசு பணியில் விரைவில் சேர்ந்து பணியாற்றலாம் என்று தேர்வெழுதியவர்கள் ஆவலில் இருக்கின்றனர்.