தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.
ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும் ஆற்றல் இருப்பதில்லை என்ற தவறானக் கருத்து மேற்கத்திய இசை வல்லுநர்களிடம் இருந்தது. அதை மாற்றிக் காட்டியவர் இசைஞானி இளையராஜா. லண்டன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் உலகப் புகழ்பெற்ற ‘ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா’ குழுவினர் இசைக்கும் வண்ணம் தனது முதல் சிம்பொனி இசைக் கோர்வையை படைத்து, அவர்களை இசைக்கவும் வைத்து சாதனை படைத்தார்.
இதுகுறித்து இளையராஜா அவர்கள் தனியார் இணையதளத்திற்கு கடந்த ஆண்டு அளித்திருந்த பேட்டியில்
சிம்பொனி பற்றிய தேடலும் புரிதலும் மெல்ல மெல்ல ரசிகர்களை வந்தடைய வேண்டும் என்று காத்திருக்கிறேன் என்றும் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ. அப்போதெல்லாம் எனது புதிய சிம்பொனியை எழுதி வருவதாவும் தெரிவித்திருந்தார்.
மேலும் மேற்கத்திய செவ்வியல் இசை மரபில் உருவான சிம்பொனி இசைக் கோர்வை, இசையுலகில் இன்று செல்வாக்கு மிக்க உயரத்தில் இருக்கிறது. உலக இலக்கியத்தில் தலை சிறந்த படைப்புகள் காலம் கடந்து, மொழிகடந்து சென்று அடுத்த தலைமுறை படைப்பாளிகளுக்கு தாக்கம் தருவதுபோலவே, சிம்பொனி இசைவடிவமும் தேச எல்லைகள் கடந்து சென்று தாக்கத்தை உருவாக்குகின்றன. சிம்பொனி இசைக் கோர்வையானது, ஒரே நேரத்தில் பல கருவிகளின் வழியாக வாத்திய ‘சேர்ந்திசை’யாக அதிக எண்ணிக்கையிலான வாத்தியக் கலைஞர்களைக் கொண்டு ‘லார்ஜ் ஸ்கேல்’ ஆர்கெஸ்ட்ராவாக இசைக்கப்படும் என இளையராஜா தெரிவித்தார்.
இந்நிலையில் தனது சிம்பொனி- 1 அடுத்தாண்டு ஜனவரி 26ஆம் நாள் வெளியாகும் என இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளா இளையராஜா தீபாவளி வாழ்த்துக்களுடன் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். அதில் தீபாவளியன்று லண்டனில் சிம்பொனி இசையை ரெக்கார்ட் செய்துள்ளதாகவும், அந்த சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வெளியிடப்படும் என்பதை உலகெங்கிலும் உள்ள இசை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
2025ம் ஆண்டு குடியரசுத் தின விழாவை கொண்டாட உள்ள இந்தியர்களுக்கு இளையராஜாவின் சிம்பொனி இசை கூடுதல் உற்சாகத்தை கொடுக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.