சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூர் காவல் மாவட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஜுன் 26ம் தேதி “சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை” முன்னிட்டு, காவல் துறை சார்பில் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, ஜூன் 23ம் தேதி மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம் எதிரிலுள்ள மணற்பரப்பில், மயிலாப்பூர் காவல் மாவட்டம் சார்பில் நடைபெற்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் J.லோகநாதன், துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மேலும், போதை ஒழிப்பு விழிப்புணர்வு போதை பொருள் ஒழிப்பு குறித்து மணற்சிற்பத்தை திறந்து வைத்து, உறுதிமொழி மேற்கொண்டனர்.
போதை பொருட்களை பயன்படுத்துவதால், ஏற்படும் தீமைகள் குறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் S.ராதாகிருஷ்ணன், திரைப்பட நடிகர் கார்த்தி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தொலைக்காட்சி புகழ் ஈரோடு மகேஷ், கானா பாடகர் பாலா ஆகியோர் சிறப்புரையாற்றி, போதை ஒழிப்பு குறித்த உறுதிமொழி கையெழுத்து பலகையில் அனைவரும் கையெழுத்திட்டனர்.
பின்னர் ராணி மேரி கல்லூரி மாணவிகள் மற்றும் கலைக்குழுவினரின் போதை ஒழிப்பு குறித்து, பாடல், நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் இணை ஆணையர்கள் R.V.ரம்யபாரதி, திஷா மிட்டல், மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ரஜத் சதுர்வேதி, காவல் அதிகாரிகள், பொதுமக்கள் என சுமார் 1,000 நபர்கள் கலந்து கொண்டனர்.