பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு செல்போன் கொடுப்பதை தவிர்த்து, அவர்களின் நலன் கருதி நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என ஐபிஎஸ் அதிகாரி கலியமூர்த்தி பேசியுள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் செயல்பட்டு வரும் GK தனியார் பள்ளியில்‘வெற்றிப் படிகள்’ வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கலியமூர்த்தி ஐ.பி.எஸ். பங்கேற்று உரை நிகழ்த்தினர்.
இதில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றை கலியமூர்த்தி நினைவு கூர்ந்தார். மாணவி ஒருவர், இந்தியாவுடைய மிகப்பெரிய பெருமை என்ன என்று அப்துல் கலாமை பார்த்து வினவினார்.
அதற்கு பதில் அளித்த அப்துல் கலாம், இந்துக்களின் அடையாளம் குத்துவிளக்கு, கிறிஸ்துவர்களின் அடையாளம் மெழுகுவர்த்தி இவற்றை ஏற்றி வைத்த நான் ஒரு இஸ்லாமியர். இந்த வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் மிகப்பெரிய பெருமை என கூறியதாக கலியமூர்த்தி தெரிவித்தார்.
மேலும் பிள்ளைகளிடம் செல்போன் தரக்க்கூடாது என வேண்டுகோள் விடுத்தார். இதில் பள்ளி தாளாளர் குமாரராஜா, அருண், திமுக ஒன்றிய செயலாளர் முத்துசாமி, பேருராட்சி மன்ற தலைவர் கணேசமூர்த்தி, முன்னாள் தலைமை ஆசிரியர் சின்னமணி, அரசு மருத்துவர் ஜெயச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.