தமிழகத்தில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அழுதுகொண்டே வந்த குழந்தைகளுக்கு சாக்லேட் தந்து ஆசிரியைகள் சமாதானப்படுத்தினர்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இந் நிலையில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் வழக்கம்போல் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். ஆனால் எல்கேஜி வகுப்பில் சேர்க்கப்பட்டு முதல் முதலாக பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இத்தனை நாள் தாய், தந்தையின் அரவணைப்பில் மட்டுமே இருந்து வந்த குழந்தைகளுக்கு பள்ளி, ஆசிரியர், வகுப்பு என புதிய உலகத்திற்குள் நுழைய தயக்கம் ஏற்பட்டது.
“கொஞ்சம் அழுதுதான் பார்ப்போம் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுவார்கள்” என்ற நம்பிக்கையில் சில குழந்தைகள் ஓவென அழுதுகொண்டே பள்ளிக்கு வந்தனர். ஆனால் பெற்றோர் எந்த கரிசனமும் காட்டாமல் அவர்களை பள்ளிக்குள் கணத்த இதயத்துடன் விட்டுச் சென்றனர். அழுது கொண்டு வந்த குழந்தைகளுக்கு சாக்லேட் மற்றும் ரோஜாப்பூ கொடுத்து ஆசிரியைகள் சமாதானப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.