டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை நீக்கியதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட, தீன் மூர்த்தி பவன் இல்லம் சுதந்திரத்திற்கு பிறகு முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்து வந்தது. ஜவஹர்லால் நேரு கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு மேலாக அந்த இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.
அந்த இல்லத்தை அவரது நினைவாக 1964ஆம் ஆண்டு நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்றப்பட்டது. இதனிடையே, இந்த அருங்காட்சியகத்தின் பெயரில் நேருவின் பெயரைவிட்டு பிரதமரின் அருங்காட்சியகம் என்று மத்திய காலச்சார அமைச்சகம் நேற்று அறிவித்தது.
மத்திய அரசின், இந்த பெயர் மாற்ற நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் சொந்தமாக வரலாறு இல்லாதவர்கள் வரலாற்றை அழிக்க முயற்சிக்கிறார்கள் என்றும், அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றுவதால் பண்டித ஜவகர்லால் நேரு புகழ் குறைந்துவிடாது என்றார்.