சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ள அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவிலில் கடந்த மே மாதம் 24ம் தேதி வைகாசி விசாக திருவிழா தொடங்கியது.10 நாட்கள் பெருந்திருவிழாவின் 9ம் நாளில் சிறப்பு பூஜைகளும் பகவதி அம்மன் பல்லக்கில் தேருக்கு எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற்ற நிலையில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஓம் காளி ஜெய் காளி என்று கூறியபடி தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று மதுரை மாவட்டம் மேலூர் அருகே பழமையான பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்ட அருள்மிகு திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திருமறைநாதர் பிரியாவிடை தாயார் மற்றும் வேதநாயகியம்மன் உள்ளிட்டோருடன் வீதி உலா வரும் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள அருள்மிகு கனகுசாம்மாள் சமேத சோழபுரீஸ்வரர் திருக்கோவிலில் வைகாசி மாத பிரதோசம் சிறப்பாக நடைபெற்றது. கோவில் முன்பு அமைந்துள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.