மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் நகரப் பேருந்து ஒன்றின் படிக்கட்டுகள் சிதிலமடைந்து உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணம் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து விக்கிரமங்கலம் அருகே உள்ள எலுவம்பட்டிக்கு செல்லும் 26ஆம் எண் கொண்டஅரசு பேருந்து படிக்கட்டுகள் சிதிலமடைந்து உள்ளதால், பொதுமக்கள் அச்சத்துடன் பயணம் செய்வதாக அங்குள்ள சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும் பயணத்தின்போது பேருந்து நிறுத்தங்களில் பொதுமக்கள் ஏறும் போதும் இறங்கும் போதும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த அரசு போக்குவரத்து கழக நடத்துனர் ஒருவர் பொதுமக்களை எச்சரித்துக் கொண்டே வருவது பொதுமக்களிடையே அரசு பஸ் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, சம்பந்தப்பட்ட நடத்துனரிடம் கேட்டபோது, கிளை மேலாளரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தால் பேருந்து எப்.சி.க்கு விடும்போது வேலை பார்த்துக் கொள்ளலாம் , தற்போது எப்படியாவது அனுசரித்து ஓட்டுங்கள் என்று கூறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே பேருந்து படிக்கட்டுகளை உடனடியாக சீர் செய்து மக்கள் அச்சமின்றி பயணம் செய்ய சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.