மதுரை:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிராம மக்கள் கொண்டாடும் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை பகுதியில் நக்கீரர் தவம் இருக்கும் போது அவரது தவத்தை கலைக்க கட்முகி என்ற பூதம் கடத்திச் சென்றது. அவரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி மீட்டு சாப விமோசனம் நீங்க மலைமேல் தனது திருக்கரத்தில் உள்ள வேல் கொண்டு கீரி கங்கைக்கு நிகரான காசி தீர்த்தத்தை வரவழைத்ததாக ஐதீகம்.

இதனை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டு தோறும் திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதி மக்கள் மலை மேல் குமரருக்கு புரட்டாசி மாதம் வேல் எடுக்கும் விழாவாக கொண்டாடுவது வழக்கம். மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழாவினை முன்னிட்டு மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் வைத்திருக்கும் வேலை பல்லக்கில் வைத்து திருவீதி உலா வந்து மலை மேல் உள்ள காசி தீர்த்தத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட து. தொடர்ந்து மலைமேல் உள்ள காசி தீர்த்தத்தில் வேலுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அங்குள்ள குமரருக்கு வேல் சாற்றப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
கிராம மக்கள் தங்களது விவசாயம் செழிக்க வேண்டி சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அங்கு வந்திருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் கதம்ப சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து மாலை பல்லாக்கில் வேல் கொண்டு வரப்பட்டு மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் சன்னதிக்கு வந்தடையும். அங்குள்ள பழனியாண்டவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வேல் பழனியாண்டவர்க்கு சாற்றப்படும். அங்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று பூ பல்லக்கில் புறப்பாடாகி திருப்பரங்குன்றம் மூலஸ்தானத்தின் உள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கரத்தில் இரவு வேல் சேர்க்கப்படும்.
இவ்விழாவில் திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வேலுக்கு அபிஷேகம் இல்லை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடவரை கோவிலாகும் அதனால் இங்கு மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணியருக்கு அபிஷேகம் நடைபெறுவதில்லை அதற்கு பதிலாக சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் உள்ள தங்க வேலுக்கு பாலாபிஷேகம் செய்யப்படும்.