மணிப்பூர் வன்முறை குறித்து விரிவான அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி இனத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு அங்குள்ள நாகா மற்றும் குகி இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இரு தரப்புக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
இதனால் ஏற்பட்ட வன்முறைக்கு இதுவரை 120 பேர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கலவரத்தை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மறுவாழ்வு நடவடிக்கைகள், சட்ட ஒழுங்கு பிரச்சினை எப்படி உள்ளது, ஆயுதங்கள் எவ்வளவு பறிமுதல் செய்யப்பட்டன, இயல்பு நிலை திரும்ப என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்கள் அடங்கிய விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.