சோழவந்தான் செப்டம்பர் 5:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பாம்பாலம்மன் திருக்கோவிலில் 57 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன்தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக, உலக நன்மை வேண்டி கிராம பெண்கள் அனைவரும் ஒற்றுமையை வலியுறுத்தி திருவிளக்கு பூஜை வழிபாடு செய்தனர்.
இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். திருவிளக்கு பூஜையையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, பாம்பாலம்மன் கோவில் நண்பர்கள் மன்னாடி மங்கலம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.