திருவள்ளூரில் தாய் கொல்லப்பட்ட வழக்கில் அவரது 2 மகன்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த பூங்கா நகரில் சேகர்-மஞ்சுளா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராஜேஷ், ரஞ்சித் என 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தாய் மஞ்சுளாவுக்கும், 2-வது மகன் ரஞ்சித்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபித்துக் கொண்டு தாய் மஞ்சுளா மூத்த மகன் ராஜேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். வீடு தேடி வந்த தாய்க்கு அடைக்கலம் தராமல் மூத்த மகனும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் மஞ்சுளா காயம் அடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக இளைய மகனுக்கு சரத் என்ற நண்பர் தகவல் தெரிவித்துள்ளார். ராஜேஷ் வீட்டிற்கு விரைந்த ரஞ்சித், நண்பர் உதவியுடன் மஞ்சுளாவை திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு மஞ்சுளாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். திருவள்ளூர் தாலுகா போலீசார் மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 2 மகன்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மூத்த மகன் ராஜேஷ் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.